Hot Posts

புதிய அரசியல். நமது பொறுப்புகள். எந்தஒரு நெருக்கடியான தேவைகளையும் அதிகாரிகளிடம் பேசிதீர்க்கும் அழகிய பழக்கத்தை கொண்டுவர வேண்டும். * CMN சலீம்


முஸ்லிம்கள் அனைவரும் விரும்பிய அரசு அமையவிருக்கிறது.தளபதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜெயலலிதா அம்மையார் மறைந்ததற்குப் பிறகு சிறுபான்மை மக்களுக்கு உருவாகியிருந்த ஒரு பாதுகாப்பற்ற சூழல் இனி மாறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.   

பாஜக அரசிற்கு இன்னும் மூன்றாண்டுகள் காலமிருப்பதால் நடுவண் அரசோடு இணங்கிச் சென்று தான் இன்றைய நெருக்கடியான நிலையை தமிழக அரசால் கையாள முடியும்.இந்த எதார்த்தத்தை முஸ்லிம்கள் உணர்ந்து தான் இருக்கின்றனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் சித்தாந்தத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் முதுகெலும்பாக முகமாக திகழும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவிகள் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது இன்றைய அருவருக்கத்தக்க எதார்த்தம்.

சூழலுக்கேற்ப எல்லைமீறிவிடாமல் பார்த்துக் கொள்வதைத் தான் நாம் வலியுறுத்த முடியும்.

அதுவும் 5 இலட்சம் கோடி கடனில் சிக்கி டாஸ்மாக் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ள தமிழக அரசிற்கு நடுவண் அரசின் உதவிகளும் உலக வட்டிக்கடைகளின்  உதவிகளும் இல்லாமல் இயங்க முடியாது. இயங்க விடமாட்டார்கள்.

முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் தனிநபராக குடும்பமாக சமூகமாக தங்களது வளங்களை அதிகரித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்மையான திட்டமிடுதலோடு மஹல்லா வாரியாக முன்னெடுக்க வேண்டும். 

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் கண்டன மாநாடுகள் என்று மஹல்லாக்கள் அனைத்தும் கொதிநிலையில் அனல் பறந்ததை கவனத்தில் கொண்டு இனி அதுபோன்ற ஒரு சூழல் உருவாகாமல் ஆற்றுப்படுத்த வேண்டும்.

முஸ்லிம் அமைப்புகளின் தோழர்களுக்கும் முகநூலில் இயங்கும் அன்பர்களுக்கும் இதில் பெரிய பங்கிருக்கிறது. 

இந்த உம்மத்தை முதலில் அமைதிப்படுத்த வேண்டும்.

அமைதி இல்லாத மனித உள்ளத்தினால் உடலின் இரத்தம் கொதிநிலைக்கு செல்வதைப்போல அமைதியற்ற சமூகத்தில் அறியாமையும் வறுமையும் சமூக சீரழிவுகளும் கொதிநிலையை அடைந்துவிடும்.

ஜனநாயக குடியரசில் எந்த ஒரு சமூக அரசியல் சிக்கலையும் எதிர்கொள்வதற்கு இரண்டு வகையான அணுகுமுறைகள் இருக்கின்றன.

ஒன்று ஜனநாயக வழியிலான போராட்ட அணுகுமுறை. இரண்டாவது தொலைநோக்கு வியூகத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளில் எதையும் தீர்த்துக் கொள்ளும் அறிவார்ந்த அணுகுமுறை. இந்த இரண்டையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

மதவழிச் சிறுபான்மை சமூகத்தவரை கொதிநிலையிலேயே வைத்திருப்பதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் 24 மணி நேரமும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

முஸ்லிம்களின் சமூக அரசியல் நடவடிக்கையில் இதுவரை இல்லாத அறிவார்ந்த புதிய அணுகுமுறை தேவை.

எந்த ஒரு நெருக்கடியையும் அல்லது தேவைகளையும் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகளோடும் அமைச்சர்களோடும் அல்லது முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியோடும் பேசித் தீர்த்துக் கொள்ளும் அழகிய அணுகுமுறையை இனி நாம் கடைபிடித்து அதையே அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்கும் பாதைக்கு மாற வேண்டும்.

இரண்டு வகையான திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஒன்று - உம்மத்தின் வளங்களை அதிகரிக்கும் திட்டம். 

இரண்டாவது - திமுக அரசுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்க வேண்டியத் திட்டங்கள்  .