Hot Posts

6/recent/ticker-posts

முறைகேடு புகார் : வக்ஃப் வாரியத்தின் மூத்த கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் அதிரடி நடவடிக்கை!!



தமிழ்நாட்டில் வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள், மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள் உள்ளிட்டவைகளின் நிர்வாகங்களை கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை சார்ந்ததாகும். 

சென்னையிலுள்ள இதன் தலைமை அலுவலகம், மற்றும் மண்டலங்களின் அளவிலும், மாவட்டங்களின் மட்டத்திலும், அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் செயல்படுகின்றனர். 

இதில், பலர் மீதும் பல்வேறு முறைகேடு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை சமுதாயத்தில் வருத்தத்தை ஏற்படுத்தி வந்ததோடு வக்ஃப் வாரியத்தின் மீதே நம்பத்தகத்தன்மை குறைந்தும் விமர்சனங்கள் அதிகரித்தும் வந்தன. இதன் உச்சகட்டமாக நீதிமன்ற உத்தரவுகளும் வெளிவந்தன. 

இந்நிலையில் நம்பிக்கையோடு எம்.அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அமைக்கப்பட விரும்பி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், வாரியம் துணிச்சலுடன் செயல்பட தமிழக அரசு முழு ஆதரவளிக்கும் என உறுதி அளித்து வாழ்த்தினார். பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல் ரஹ்மான் அவர்கள் வக்ஃப் வாரியத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒளிவு மறைவின்றி முழுமையான வெளிப்படைத் தன்மையோடும், அரசியல் மற்றும் செல்வாக்குமிக்கவர்களின் குறுக்கீடுகளுக்கு கொஞ்சமும் இடமளிக்காத வகையிலும் நேர்மையாகவும், நீதியாகவும் செயல்படும் என முதல் பேட்டியிலேயே உறுதியளித்திருந்தார்.

எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அமைக்கப்பட்டதும் சமுதாயம் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரை நேரில் சந்தித்து கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் முறையிட்டு வருகிறது.  

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் சீரமைப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரக்கூடிய அதன் தலைவர், முறைகேடு புகார்களின் மீது முழுமையான கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளார். 

அதன் அடிப்படையில் முறைகேடு புகார்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில் வக்ஃப் வாரியத்தின் மூத்த கண்காணிப்பாளர் ஒருவரை அதிரடியாக பணி இடை நீக்கம் செய்து வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் 27-08-2021 அன்று உத்தரவிட்டுள்ளார். 

இது தொடக்கம் தான் என்றும் இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவைகளுக்கான புகார்கள் மீது முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வக்ஃப் வாரிய செய்திகள் தெரிவிக்கின்றன. 

வாரிய பணியாளர்கள் மீதான நடவடிக்கை மட்டுமின்றி வக்ஃப் சொத்துக்களை முறைகேடு செய்வோர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. 

வாரிய தலைவரின் அதிரடி நடவடிக்கைகள் மிகுந்த பரபரப்புடன் சமுதாயத்தால் உற்று நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.