கடந்த 28 ஆண்டுகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான அனாதை சடலங்களை அடக்கம் செய்ய முன்வந்த முஹம்மது ஷெரீப்பின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், அவருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
நவம்பர் 8-ந் தேதி திங்கட்கிழமை அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது பொதுமக்களின் சேவையைப் பாராட்டி ஒன்றிய அரசால் வழங்கப்படும் நான்காவது மிகப்பெரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசம் அயோத்தி யாவில் ஷெரீப் சாச்சா என்று பாசமாக அழைக்கப்படும் இவரின் மகன் ரஹீஸ் பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரம் உச்சநிலையில் இருந்தபோது சுல்தான்பூருக்கு செல்லும் வழியில் மதக்கலவரத்தில் பலியானார். ரயில்வே தண்டவாளங்களில் அனாதையாக கிடந்த அவரது ஜனாஸாவை தெருநாய்கள் கடித்துக் குதறிய காட்சிகள் முஹம்மது ஷெரீப்புக்கு பெரும் வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
தனது மகனைப் போல இனிமேல் யாரும் இறுதிச் சடங்குகள் கூட செய்யாமல் அனாதைச் சடலமாக ஆகக்கூடாது என்று 1992ஆம் ஆண்டிலிருந்து சமூக சேவையை தொடங்கினார்.
மருத்துவமனை பிணவறை ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பவர்கள் அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய காவல்துறைக்கு உதவியுள்ளார். கடந்த 28 ஆண்டுகளில் 25000க்கும் அதிகமான அனாதை சடலங்களை அடக்கம் செய்ய முன்வந்த முஹம்மது ஷெரீபின் சேவைகளை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
பெற்ற மகனை இழந்த நிலையிலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து அழகிய பொறுமையை கடைப்பிடித்த துடன் அரியதொரு சமூகசேவையில் ஈடுபட்டுள்ளதால் முஹம்மது ஷெரீப்புக்கு நாட்டின் மிகப்பெரிய கவுரமான பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
Social Plugin