அரசியல், பொருளாதாரம், மக்கள் தொடர்பு, ஆட்சி அதிகாரம் என அனைத்து
துறைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக உள்ளது
முஸ்லிம்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மஹல்லா ஜமாஅத்
கட்டமைப்பு மூலம் பைத்துல் மால்களை உருவாக்க வேண்டும்
சேலத்தில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கே.நவாஸ் கனி எம்.பி. பேச்சு
சேலம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் 32வது கோட்டம் சார்பில் மீலாதுந் நபி மத நல்லிணக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 17-11-2021 புதன்கிழமை மாலை சேலம் மேட்டுத்தெரு லால் மஹாலில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளரும், ஐவர் குழு லால் மஸ்ஜித் நிர்வாகக்குழு தலைவருமான ஹாஜி ஹன்னு என்ற சாதிக் பாஷா தலைமை தாங்கினார்.
லால் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா வலியுல்லாஹ் கிராஅத் ஓதினார்.
லால் மஸ்ஜித் ஐவர் குழு செயலாளர் ஏ. அப்துல் ரபீ, எம். முபாரக் அலி, டி.அன்வர் உசேன், எஃப்.முஜீப்தீன், எஸ்.இம்ரான், ஏ.ஆர். பாஷூ, ஏ.ஆர். நியாஜி, எம்.எஸ்.கே.அப்துல் காதர், ஜி.இம்தியாஸ் பாஷா, ஜி.முபாரக் பாஷா, பி.ஜாகிர் உசேன், ஏ.ஜே.பைசுல்லாகான், ஜி. இர்பான் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஏ. அன்சர் பாஷா வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட துணைச் செய லாளர் ஒய்.லியாகத் அலிகான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார்.
எஸ்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் ஏ. செய்யது அலி, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.ஆர். அன்வர், முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத்தலைவர் எம். ஹசன் ஜக்கரியா, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர், வி.சி.க. மாநகர பொருளாளர் இ.காஜா மொய்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா அபுதாகிர் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி. பேசியதாவது:-
இருலோக இரட்சகர்
இருலோக இரட்சகர் நம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழி காட்டல்களை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்து இயம்புவது இதுபோன்ற நிகழ்ச்சிகள், விழாக்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் இங்கு உரையாற்றிய ஹஸ்ரத் அவர்களிடம் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னீர்கள். அவர்களும் மிகச் சிறப்பான தகவல்களை உள்ளடக்கி உரையாற்றி அமர்ந்திருக்கிறார்கள்.
மிகச் சிறந்த படைப்பு மனிதன்
இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த படைப்பு மனிதன். அந்த உயர்ந்த மனிதப் படைப்பிலும் நாமெல்லாம் முஃமின்களாக இருப்பது இன்னும் பெரிய சிறப்பைத் தரக்கூடியது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அதுபோன்ற நேரங் களில் மனதளவில் துவண்டு விடக்கூடிய மக்கள் சிலரைச் சந்தித்துப் பேசும்போது, ""நாமெல்லாம் முஃமின்கள் என்பது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்"" என்றதும் அவர்களின் மனத்துவளல் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்விடும். அத்தகு பாக்கியசாலிகள் நாம்.
மனிதன் எப்படி வாழவேண்டும்
அப்படிப்பட்ட நாம் இன்று எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் - ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள். வெறுமனே தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்க வழிபாடுகளை மட்டும் அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை. மாறாக அரசியல், பொருளாதாரம், மக்கள் தொடர்பு, ஆட்சி, அதிகாரம் என எல்லா வகையிலும் அவர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நபிகள் நாயகம் அவர்களை நாம் அனைவரும் உயிரினும் மேலாக நேசிப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அந்த நேசம் முழுமையாகப் பூர்த்தி அடைவது என்பது அவர்களை நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிசகற பின்பற்றி வாழ்வதில் தான் இருக்கிறது. அதை நாம் சரியாகச் செய்தோமானால் இந்த உலகமே மிக அமைதியாக இருக்கும்.
பொருளாதார திட்டம்
எடுத்துக் காட்டாக, இங்கே நபிகளார் கற்றுத் தந்த வாழ்வாதார முன்னேற்றத்திற்கான பொரு ளாதாரத் திட்டம் குறித்து பேசப்பட்டது. அதை மட்டும் நாம் முழுமையாகப் பின்பற்றி நடந்தாலே இன்று நாம் வாழும் பகுதியில் ஏழ்மை என்பதே இருக்காது அல்லவா? ஆனால் ஏழைகளும் இருந்துகொண்டு தானே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் - நபிகளார் காட்டித் தந்த பொருளாதாரத் திட்டத்தை நாம் முறையாகக் கடை பிடிக்கவில்லை; செயல் படுத்தவில்லை என்பதுதான்.
மஹல்லா ஜமாஅத்
உலகில் வேறு எந்த சமூகத்திற்கும் அமையாத அழகான ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது. அதுதான் மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு. அதன்மூலம் ஒரு கருவூலத்தை (பைத்துல்மால்) அமைத்து, ஸகாத் கடமையான அனைவரையும் நேரில் சென்று சந்தித்து - அவர்களின் ஸகாத் தொகையைக் கணக் கிட்டு வசூலித்து, கருவூலத் தில் சேர்த்து, அதைப் பெறத் தகுதியான வர்களைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்து, வாழ்வாதாரத்தை நிரந்தரமாக ஏற்படுத்தினால் - அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர்களும் ஸகாத் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள். ஆனால் பரிதாபம் - நமது மஹல்லா ஜமாஅத்துகள் பலவற்றில் வெறுமனே ஐந்து வேளை தொழுகை, ரமழான் நோன்பு கால சிறப்பு வழிபாடுகள் என்ற அளவிலேயே நின்று விடுகின்றன. அவற்றைத் தாண்டி இதுபோன்ற பொரு ளாதார முன்னெடுப்பு நடவடிக்கைகள் துவக்க நிலையில் கூட இல்லை. அந்தந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளும் சமுதாயத்தை வழிநடத்தும் மார்க்க அறிஞர்களும், சமூகத் தலைவர்களும் இதுகுறித்து வலியுறுத்தி - அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்ட வேண்டும்.
நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு மஹல்லா ஜமா அத்தின் கீழ் இருப்பவர்கள் தான். குறைந்தபட்சம் நாம் சார்ந்துள்ள ஜமாஅத்தில் மட்டுமாவது இதை வலி யுறுத்தி நடைமுறைப் படுத்தும் பொழுது - இப்படி எல்லோரும் எல்லாப் பகுதிகளிலும் செய்யும் பொழுது திரட்டப்படும் நிதி ஒரு பெருந்தொகையாக மாறி, அவரவர் பகுதிகளில் இனிமேல் ஸகாத்தைக் கைநீட்டிப் பெற யாருமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும். பிறகு அதைத் தேவை உடையவர்கள் - உள்ளூர், வெளியூர்கள், மாவட்டம், வெளி மாவட்டங்கள் என நமது நிதி அளிக்கும் எல்லையை விரிவுபடுத்தி வழங்கலாம். ஏன், நாட்டளவிலும், உலக அளவிலும் கூட உதவிக் கரத்தை நீட்டலாம். கல்வி முன்னேற்றம், தொழில்துறைக்கு உதவி எனப் பார்த்து பார்த்து நாம் உதவித் தொகைகளை வழங்கும்பொழுது - ஒவ்வொரு சமுதாயமும் தத்தம் பகுதிகளில் தன்னிறைவோடும், பிறருக்கு வழங்கும் தகுதியோடும் திகழும். இதுதான் நபிகள் நாயகம் அவர்கள் நமக்குப் போட்டு தந்த பொருளாதாரத் திட்டம் என்பது.
கல்வி
கல்வி என்ற ஒரு துறையை மட்டும் எடுத்துக் கொண்டாலே முஸ்லிம் களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் அறிக்கை - ‘’இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி நிலை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நிலையை விட பரிதாபமாக இருக்கிறது"" என்று கூறுகிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையோ, ""முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு எல்லா துறைகளிலும் வழங்கப்பட வேண்டும்"" என்று வலியுறுத்துகிறது. இந்த வலியுறுத்தல்களையும், வழிகாட்டல் களையும் இன்று இருக்கும் அரசு புரிந்துகொண்டு செயல்படும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. அதே நேரத்தில், ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் - நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப் படுத்தி, அவரவர் பகுதிகளில் ஸகாத் கொடுப்பதற்குத் தகுதி யானவர்கள், ஜகாத் நிதியைப் பெறுவதற்கு தகுதி யானவர்கள் என அனைவரையும் கணக்கெடுத்து, உரிய முறையில் அந்த பைத்துல்மால் எனும் பொருளாதார அமைப்பைச் செயல்படுத்துவோமானால் நிச்சயமாக நமது சமுதாயத்தின் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி அடையும்.
அன்புச் சகோதரர்களே... கடந்த ஆண்டுகளில் மீலாத் விழாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி, பெரும்பாலும் இல்லை என்று சொல்லும் அளவில் ஆகிவிட்ட பிறகு, அதனால் ஏற்படப்போகும் தீய விளைவுகளை உணர்ந்த வர்களாக நமது தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் பெருமகனார் அவர்கள், ""இந்திய நாடு முழுவதும் மீலாத் விழாக்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் நடத்தப்பட வேண்டும்... அப்படி நடத் தப்படும் விழாக்கள் வெறுமனே உள்ளுக்குள் நடத்துவதாக இல்லாமல் சகோதர சமயங்களைச் சேர்ந்த தலைவர்களை, பேச்சாளர்களை வரவழைத்து - இஸ்லாம் குறித்த அவர்களின் புரிதலை எல்லோருக்கும் வெளிப்படுத்தவும், நாம் தெரிந்து வைத்திருக்கிற இஸ்லாமிய அடிப்படைத் தகவல்களை அவர்களுக்கு எடுத்துரைக்கவும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்"" என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். அதனடிப் படையில் ஆண்டுதோறும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீலாத் விழாக்கள் சமய நல்லிணக்க விழாக்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நலத்திட்ட உதவிகள்
அந்த வரிசையில் இன்று சேலம் மாநகரில் அழகிய விழாவை நடத்தி, தேவையுடையவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் அற்புதமான சேவைக் கும் ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இது போன்ற சேவைகள் தொடர்ந்து செய்யப்படும் போதுதான் நம் சமுதாயத்திற்கு மற்றவர் களிடத்தில் நற் பெயர் கிடைக்கும். சமுதாய மக்களுடன் நல்லதொரு புரிதல் ஏற்படும். கடந்த ஆண்டுகளில் சமூக விரோதிகளாலும், பல்வேறு ஊடகங்களாலும் நம் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட தவறான பரப்புரைகள் மறக்கடிக்கப்பட்டு, நம் சமுதாயத்தின் உண்மை மனநிலை அனைவருக்கும் உணர்த்தப்படும். புயல், வெள்ளம், ஆழிப்பேரலை - சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், இரத்தம் உள்ளிட்ட மருத்துவத் தேவை களுக்காகவும் பொதுமக்கள் - அவர்கள் எந்த சமயத்தை, பகுதியை, இனத்தை, ஜாதியை, மொழியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்ப்பதை சிந்தனையின் ஓரத்தில் கூட வைத்துக் கொள்ளாமல் உடனடியாக ஓடோடிச் சென்று உதவக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக் கிறார்கள். இதை உணர்ந்த அனைவரும் பெருந் தன்மையோடு சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.
சேவைகள், உதவிகள், சமூகநீதி, சமய நல்லிணக்கம் குறித்தெல்லாம் இன்று எல்லோரும் பேசலாம்; பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்யும் இந்தச் சேவைகள் என்பது ஏதோ இன்று நாம் துவங்கிச் செய்வன அல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் அவர்களால் எப்படி வாழ்ந்து வழிகாட்டப் பட்டதோ அதைப் பின்பற்றி வாழ்வதால் நமக்கு இந்த உணர்வு இயல் பாகவே அமைந்து விட்டது. அதனால்தான் நமக்குள் உள்ள சில பல உள் பிரச்சனைகள், உள் வலிகள் என எதையும் பொருட்படுத்தாமல் சமூகப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். செய்யும் பணிகளை - இன்றைய தேவையை உணர்ந்து இன்னும் விரிவுபடுத்தி வேகமாகவும் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நாம் நமக்குள் வலியுறுத்திக் கொள்ள வேண் டிய நிலையில் இருக்கிறோம்.
முஸ்லிம்களை கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது
அன்பானவர்களே, இது நமக்கு - முஸ்லிம் சமு தாய மக்களுக்கு நெருக் கடியான காலகட்டம். திட்டமிட்டே நமக்கு எதிராக சமூக அளவில் அரசியல் நெருக்கடிகள் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நமக்கு ஷரீஅத் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்குக் கங்கணங்கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அன்மையில் திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம் சமுதாயம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதலும், வங்கதேசத்தில் சில இந்துக்கள் தாக்கப்பட்டார்கள் என்று கூறி - அதற்கு எதிர்வினையாக அரசு உதவியுடன் முஸ்லிம் கள் பெருமளவில் தாக்கப்பட் டதும் நடை பெற்றிருக்கின்றன. ஒன்றிய பாஜக அரசு இரண் டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு சட்டங்களை - தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கொண்டு வந்து, முஸ்லிம் சமுதாய மக்களை எப்போதும் கொதி நிலையிலேயே வைத் திருக்கிறது. இதனால் இந்த நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்தச் சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அரணாக தொடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் மக்கள் பிரதிநிதிகளாக நாங்களும் நாடாளு மன்றத் திலும், சட்ட மன்றங்களிலும் எங்களது குரல்களை உரிய நேரத்தில் உரிய முறைப்படி வலிமையோடு எழுப்பி, கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு உங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பும் துஆக்களும் நல்ல ஆலோசனைகளும் தொடர்ந்தது தேவைப் படுகிறது என்பதையும் இத்தருணத்தில் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட உடன் - நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் மக்கள் பிரதிநிதிகளாக தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்ந்தெடுக் கப்பட்ட நாங்கள் நால்வரும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, பின்பு நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து எங்கள் கருத்துகளை வலிமையாகப் பதிவு செய்ததோடு மட்டு மன்றி, இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தும் வந்தோம். இத்தனையையும் தாண்டி பாராளுமன்ற நடை முறைகளுக்கு மாற்ற மாக இச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் நள்ளிரவில் கையெழுத்திடுகிறார். அடுத்த நாள் காலையிலேயே நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனைவருக்கும் முதலாவதாக வழக்கு தொடுத்தது என்பதை யெல்லாம் நீங்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள்.
உறுப்பினர் சேர்க்கை
ஆக, இந்தத் தாய்ச்சபை நம் சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும். இங்கு யாருக்கும் சுயநலம் என்பது எள்முனையளவும் கிடையாது. அப்படிப்பட்ட தாய்ச்சபைக்கு இன்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இதில் தங்களை உறுப்பினர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். சமுதாயப் பாதுகாப்புக் காகவும், இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவரவர் கலாச்சாரத் தனித்தன்மைகளை - அடையாளங்களைப் பாது காப்பதற்காகவும் பழுத்த அனுபவத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் நம் தாய்ச்சபையை மென்மேலும் வலுப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
சமுதாயத்திற்குள் மார்க்க ரீதியான தேவைகள் என்று வரும்பொழுது கண்ணியத் திற்குரிய உலமாக்களின் முறையான வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும் என சமுதாயத்தினரைத் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கக் கூடியதாகவும், அரசியல் என்று வரும்பொழுது சமுதாய மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் குளிர் காயாமல், அவர்களுக்கு முறையான வழிகாட்டு தல்களை உரிய நேரத்தில் வழங்கிக் கொண்டிருக்கக் கூடியதாகவும் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது பண்பட்ட நடவடிக்கைகளின் பயனாகத்தான் - அண்மையில் அமைந்துள்ள புதிய சட்டமன்றத்தில் நம் தாய்ச்சபைக்கு ஒரேயோர் உறுப்பினர் கூட இல்லாத நிலையிலும் - மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளிட்ட வக்ஃப் நிறுவனங்களை நிர்வகிக்கும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைமைப் பொறுப்பை தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நம் தாய்ச்சபைக்கு வழங்கியிருக்கிறார், அதன் முதன்மைத் துணைத் தலைவரான அன்புச் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் வக்ஃப் வாரிய தலைவராகவும், நான், சகோதரி ஃபாத்திமா முஸஃப்பர் ஞு டாக்டர் ஹாஜா கே. மஜீத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். இதுவரை இருந்த வக்ஃப் நிர்வாகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அனைவரும் ஒரே சிந்தனையில் இந்த வாரியத்தைத் திறம்பட செயல்படுத்திட தீர்மானத்தோடு இருக்கிறோம்.
எங்கள் முதன்மைப் பணியாக, மாநிலம் முழுக்க வக்ஃப் நிறுவனங்களுக்குச் சொந்தமான - தனிநபர் ஆக்கிர மிப்பில் இருக்கும் சொத்துகளை மீட்டெடுப் பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம், மறுபுறம் - இருக்கும் சொத்துக்களை எதுவும் செய்யாமல் சும்மா வைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து அவற்றில் சமுதாயத்திற்குப் பயன்தரக்கூடிய திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் நாங்கள் முனைப்போடு செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம். மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்... தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் இந்தப் புதிய நிர்வாகம் நன்மையை நாடக் கூடிய சமுதாய மக்களுக்கு மிகச்சரியான வாய்ப்பைத் தரக்கூடியது. இதைப் பயன்படுத்தி, உரிய திட்டங்களுடனும், முன்னெடுப்பு களுடனும் வக்ஃப் வாரியத்தை அணுகி, நம் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உங்களை அன்போடு நான் வேண்டிக்கொள்கிறேன்.
இத்தனைக்கும் காரணமாக நம் தாய்ச்சபையின் தன்னிகரற்ற தேசிய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் சிறப்பான வழிகாட்டல் அமைந்திருக்கிறது. அதன்படி நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து நின்று, நம் சமுதாய முன்னேற்றத்தி ற்காகவும் நம் மாநில, தேசிய ஒற்றுமைக்காகவும் - நம்மாலான எல்லாவற்றையும் செய்வோம் என்று சூளுரைத்து, இந்த நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து - அதில் எனக்கும் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு சேலம் மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கும், அங்கத்தினருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். நீண்ட நேரம் கடந்துவிட்டபோதும் - துவக்கத்தில் இருந்த உற்சாகம் குறையாமல் இறுதி வரை இருந்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் அவதானித்த பொதுமக்களாகிய உங்க ளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் பங்கேற்றோர்...
இந்நிகழ்வில் நூருல் இஸ்லாம் மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஏ. ஹாரூன் ரஷீத், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மௌலானா ஹெச்.எம். அபுதாகிர், எம்.எஸ்.பி. ஜாகிர், ஏ- அலாவுதீன், எம்.பி.கே. பாரூக், சையது முஸ்தபா, யூ.ஷாகுல் ஹமீது, மணிச்சுடர் காதர் ஷெரீப், நிஷார் அஹமது, டபிள்யூ. அப்துல் அஹமது, முஹம்மது பாபு, என்.உமர் பாரூக், சி.அப்துல் ரஹீம், ஏ.இப்ராஹிம். ஏ.முஹம்மது நயாஸ், கோட்டை இத்ரி சேட், அஸ்கர் அலி, நிஜாமுதீன், முஹம்மது பாஷா, ஜீலான் பாஷா, சி.கே.ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
32வது கோட்ட பொருளாளர் ஏ. அனீஸ் பாஷா நன்றி கூறினார்.
சேலம் மாவட்ட அரசு காஜியும் மதரஸா மழா ஹிருல் உலூம் அரபிக் கல்லூரி பேராசிரி யருமான மௌலானா முக்தி அபுல்கலாம் காஸிமி துஆ வுடன் கூட்டம் நிறைவுற்றது.
Social Plugin