Hot Posts

6/recent/ticker-posts

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையினர் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையானவற்றை நிறைவேற்றி வருகிறது. நாவாஸ்கனி எம்,பி, பேச்சு



இன்றைய  அரசியல் சூழலில் எவ்வித சமரசமும் இன்றி சமுதாயத்திற்காக பாடுபடும் இ.யூ.முஸ்லிம் லீகில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர்

கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் கே.நவாஸ் கனி எம்.பி. பேச்சு

சென்னை, நவ. 26 -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஊழியர் கூட்டம் 25-11-2021 வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள அல்ஷாம் பார்ட்டி ஹாலில் மாவட்ட தலைவர் கே.எஸ்.தாவூத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி.  புதிதாக உறுப்பினர்களாக இணைந்துள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஊழியர் கூட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியன இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு இந்த மாவட்டத்தில் இருந்து எந்த அளவுக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்த் தீர்களோ அதையெல்லாம் விட மிக அதிகமாக இப்பொழுது உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குத் தேவையான ஆலோ சனைகளை வழங்கு வதற்காகவும், உங்கள் கருத்துகளைக் கேட்பதற் காகவும் புதுப்பட்டினத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில்  மழை காரணமாக அது தடைபட்டு, இப்போது இங்கே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் அழைத்துவிட்ட காரணத்தால், உங்கள் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் தலைமை நிலையத்தில் இருந்து நாங்கள் நிச்சயம் வந்து கலந்து கொள்வோம். அதன் அடிப்படையில்தான் இங்கும் கலந்து கொண்டிருக்கிறோம்.

தேசிய தலைவரின் சீரிய வழிகாட்டல்

தற்காலச் சூழலில் நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர், பல்வேறு இயக்கங்களில், அரசியல் கட்சிகளில், சமுதாய அமைப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் எல்லாம் இப்பொழுது கூட்டங்கூட்டமாக வந்து சேரக்கூடிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டும், செய்திகள் வாயிலாக அறிந்து கொண்டும் இருக்கிறீர்கள்.
 
இப்படி நல்லதொரு சாதகமான சூழல் இருந்து வருகிற இந்தத் தருணத்தில் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் நீங்கள் எல்லோரும் ஊக்கமுடன் செயல்பட்டு, நம் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தாய்ச்சபையில் இணைத்து, மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்து, தேவையான இடங்களில் புதிய பிரைமரிகளை அமைத்து, தாய்ச்சபையை வலுப்படுத்தி, அதன் மூலம் சமுதாயத்துக்குப் பெரும் பயன் கிடைக்கச் செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இன்று இருக்கும் அரசியல் சூழலில் எவ்வித சமரசமும் இன்றி சமுதாயத்திற்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் சுயநலம் பற்றி சிறிதும் சிந்திக்காத - நம் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர், தாய்ச்சபையின் தேசிய தலைவர் பேராசிரியர் அவர்களின் சீரிய வழிகாட்டல்தான்.

நம் சமுதாய மக்கள் உட்பட - மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த படி, திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அதன் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் அமைந்து, பொறுப்பேற்ற ஆறு மாதங்களிலேயே எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மையினர் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி, தேவையான வற்றை உடனுக்குடன் இந்த அரசு நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறது. கொரோனா பெரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை உலகமே முன்னுதாரணமான செயலாகப் புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நல்லாட்சி காரணமாகத்தான் நாமெல்லாம் ஒரு பாதுகாப்பான சூழலை உணர்ந்து அனுபவித்து வருகிறோம்.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை

ஒன்றிய பாஜக அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்யும் நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வந்தது. அதனால் புண்பட்டுப் போயிருந்த நம் மாநிலத்தின் அனைத்து மக்கள் உள்ளங்களிலும் நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் இப்போதைய ஆட்சி - யாருடைய குறுக்கீடும் இன்றி சுயமரியாதையுடன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியான இந்தச் சூழலில் 700 சிறைவாசிகள் தண்டனைக் காலம் நிறைவுறுவதற்கு முன்பாக விடுதலை செய்யப்படும் நிலை இருக்கிறது. அதில் பல்லாண்டு காலம் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் இடம் பெற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சமுதாய மக்களிடம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறது. சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் பலவாறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக நம் தாய்ச்சபையின் தேசிய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் - """"அரசாணை எதுவாக இருந்தாலும் இறுதி முடிவு என்பது முதலமைச்சர் கையில்தான் இருக்கிறது... எனவே சமுதாய மக்கள் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து பொறுமையோடு எதிர் பார்த்துக் காத்திருப்போம்..."" என்று சரியான நேரத்தில் மிகச் சரியான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

சிறைவாசிகளின் நன்னடத்தைக்கு நான் பொறுப்பேற்கிறேன்

நம் மாநிலத்தின் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு என்ன தேவை என்றாலும் அதை நளினமான முறையில், சரியான தருணத்தில் கேட்டுப் பெறும் நிலையில் நம்முடைய தேசிய தலைவர் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை வைத்து அரசியல் செய்யப் பட்டாலோ, விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டாலோ அதற்கு பதிலளிக்கவோ, கண்டு கொள்ளவோ நமது இயக்கம் ஆயத்தமாக இல்லை. செய்யப்படுவது கடுகளவாக இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி விளம்பரப் படுத்தப்படும் இந்தக் காலகட்டத்தில், எத்தனையோ செய்தும் எதையுமே யாரிடமும் சொல்லாமல், எப்படியாவது நடவடிக்கை எடுக்கப்பட்டால் போதும் என்ற நிலையில் நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துவக்கம் முதல் இன்று வரை - அதன் தங்கமான தலைவர்களின் வழிநடத்தலில் செயல்பட்டு வருகிறது.

ஆக, இப்போதைய சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையைத் தேவையின்றி விமர்சனமாக்கி, அதன் காரணமாக - எதிர் பார்க்கப்படும் நல்ல நடவடிக்கைக்கு எந்தக் குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நம்முடைய தேசிய தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் "ஏதோ அறியாமையால் எம் சமுதாயத்து இளைஞர்கள் சில தவறுகளைச் செய்திருக்கலாம். அவர்கள் சிறையில் பல்லாண்டுகள் வாடிக் கொண்டு இருப்பதால் அவர்களது குடும்பங்கள் நிர்க்கதியாக இருந்து கொண்டிருக்கின்றன... எனவே கருணையுள்ளம் கொண்டு முதல்வர் அவர்கள் அவர்களை விடுதலை செய்தால் அவர்களின் பிற்கால நன்னடத்தைக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்..." என்று முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் உறுதி கூறினார்கள் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள். ஆனால் அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெற்று விட்டதால் நம் கோரிக்கை நிறைவேறா மலேயே போய்விட்டது.

தளபதி தலைமையில் நல் ஆட்சி

இப்பொழுது மீண்டும் தளபதி அவர்கள் தலைமையில் நல் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்தி, நம்முடைய தேசிய தலைவர் பேராசிரியர் அவர்களின் தலைமையில் நாங்கள் எல்லோரும் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறோம். மிக முக்கியமாக சிறைவாசிகள் விடுதலை கோரிக்கைகையை அழுத்தமாக முன் வைத்திருக்கிறோம். இதுவரை செய்துவிட்ட இந்தச் செயல்களைக் கூட - ஒவ்வொன்றாக விளம்பரப் படுத்தி சமுதாயத்தில் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம் தாய்ச்சபையில் யாரும் சிந்திக்கவில்லை. அதனால்தான் முஸ்லிம் லீக் சமுதாயத்துக்கு என்ன செய்தது என்று ஆங்காங்கே ஆக்ரோஷமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிற நேரத்திலும், அதன் அப்பழுக்கற்ற தலைவர்களின் நன்னடத்தையைச் சந்தேகித்து பேசிவருகிற சூழலிலும் - அவற்றையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல், காரியமே பெரிது என்று நம்முடைய தலைவர் தலைமையில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இ.யூ.முஸ்லிம் லீகிற்கு வக்ஃபு வாரியத் தலைவர் பதவி

நம் தாய்ச்சபையின் - குறிப்பாக நம் தன்னிகரற்ற தலைவரின் பக்குவமிக்க செயல் பாடுகளை உணர்ந்திருக்கிற காரணத்தால் தான், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட போதிலும், தமிழகம் முழுக்க உள்ள வக்ஃப் நிறுவனங்களை நிர்வகிக்கும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமைப் பொறுப்பை நமது கட்சிக்கு - நம் மாநில முதன்மைத் துணைத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். அதன் உறுப்பினர்களாக நானும், சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அவர்களும், இன்னும் சிலரும் இருந்து வருகிறோம். வாரியத்தின் கூட்டம் சென்னையில் இன்றம் நேற்றும் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்தவுடன் - இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கே வருகை தந்திருக்கிறேன்.

வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. இன்னும் ஏராளமான இடங்கள் பயன்பாடு இல்லாமலேயே இருக்கின்றன. அந்த இடங்களை முறையாகச் சிந்தித்துப் பயன்படுத்தினாலே சமுதாயத்தின் அத்தியாவசியத் தேவைகளை யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதை உணர்ந்தவர்களாக - இதுபோன்ற பயன்பாடற்ற இடங்கள்தான் சமூக விரோதி களால் எளிதில் ஆக்கிரமிக்கப் படுகிறது என்பதைக் கருத்திற்கொண்டு - இருக்கும் இடங்களில் சமுதாயத் திற்கு தற்காலத்தில் மிக அவசியமாகத் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை விரைவாக முறைப்படி அமைப்பதற்கு அக்கூட்டத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பிலுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்க செயல் திட்டம்

இருக்கும் இடங்களை இப்படி யாகப் பயன்படுத்து வதற்கான திட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுவரும் அதே நேரத்தில், மிக முக்கியமான இடங்களிலெல்லாம் அதிக மதிப்புள்ள வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன - அவற்றை மீட்பதற்கான செயல் திட்டங்களையும் நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்தா லோசித்து, தேவையான முடிவுகளை எடுத்து இருக்கிறோம். தாய்ச்சபைக்கு வக்ஃப் வாரிய தலைமை பொறுப்பு கிடைத்திருக்கும் இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்தி, அந்தந்தப் பகுதியில் உள்ள ஜமாஅத்தார்கள் - குறிப்பாக நம் தாய்ச்சபையின் நிர்வாகிகள் தத்தம் பகுதிகளில் சமுதாயத்திற்கு என்னென்ன நிறுவனங்கள் தேவையாக இருக்கின்றன என அந்தந்தப் பகுதி மக்களோடு கலந்து ஆலோசித்து, ஆய்ந்தறிந்து, திட்டங்களை வாரியத்திடம் முன்வைத்தால் - மிக விரைவாக அவற்றை நடைமுறைப்படுத்திட நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படியாக வக்ஃப் வாரியத்திலும், சிறுபான்மை யினர் நலன் தொடர்பான அம்சங்களிலும் நமது தாய்ச்சபையின் சீரிய பணி இருந்து வருகிறது. இவை நமது ஆக்கப்பூர்வமான பணிகள் என்றால், இன்னொரு பக்கம், ஒன்றிய பாஜக அரசு நம் சமுதாயத்திற்கு எதிராக நிறைவேற்றி இருக்கும், நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் சட்டங்கள், திட்டங்களுக்கு எதிராக பாராளு மன்றத்திற்கு உள்ளும், அதன் வெளியேயும் வீரியமுடன் போராடிக் கொண்டிருக்கிறது நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். நம் ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாப்பதிலும் நம் சமுதாய நலனைப் பாதுகாப்பதிலும் நம் தாய்ச்சபையின் கடந்த கால தலைவர்கள் என்னென்ன வெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பனவற்றை நமது மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுத்தீன் அவர்கள் இங்கே விளக்கிப் பேசினார்.

பாராளுமன்றத்தில் நம் குரல்

இப்பொழுது ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு - முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களைத் தனது எதேச்சாதிகாரப் பெரும் பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றி இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவாக பாராளு மன்றத்தில் முன்வைக்கப்பட்டு, பிறகு அது சட்டமாக்கப்படுவதற்கு முன்பே நம் தாய்ச்சபையின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர் களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக அதை எதிர்த்து அடையாள ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, அதற்குப் பின்புதான் பாராளுமன்றத்திற்கு உள்ளே நுழைந்தோம். அங்கும் இந்தச் சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையாகப் பேசினோம், விவாதித்தோம், எதிர்த்து வாக்களித்தோம். என்றாலும் ஆளும் அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அவர்கள் சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். பாராளுமன்ற மக்களவையில் நிலை இப்படி என்றால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. என்றாலும் தமிழகத்தின் அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பி னர்கள் அங்கு ஆதரவளித்த காரணத்தால் சட்டம் நிறைவேறும் சாதகமான சூழல் ஏற்பட்டது. பிறகு நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நள்ளிரவிலேயே சட்ட நிறைவேற்றாத்திற்குக் கைச்சான்றிட்டார்.

சிஏஏவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இ.யூ.முஸ்லிம் லீம்

அடுத்த நாள் காலையில் நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்களோடு இச்சட்டம் குறித்து கலந்தாலோசித்து விட்டு, தனது முதல் பணியாக - நாட்டிலேயே முதன் முறையாக இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பிறகு நம்மைப் பின்பற்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உட்பட ஏராளமானவர்கள் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வந்தாலும், ”Indian Union Muslim league and others" என்றுதான் வழக்கின் வாசகம் இருக்கும். இப்படியாக தேவையான நேரங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட மக்கள் மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் நமது ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

கொரோனா, வெள்ளப்பெருக்கு போன்ற காலங்களில் தாய்ச்சபை உதவி

அதுபோல - வெள்ளப் பெருக்கு, கொரோனா பெரும் தொற்று பரவல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் முன்னின்று களப்பணியாற்றி, உரிய நேரத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுத்து, பொது மக்களுக்குப் பாதுகாப்பான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது நம் தாய்ச்சபை. இயற்கைப் பேரிடர்களால் சில இடங்களில் பிணங்களை அடக்குவதற்குக் கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டபோது - அவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பாராமல், அந்தப் பிணங்களைப் பொறுப்பேற்று கண்ணியமாக அவரவர் சமய வழக்கப்படி அடக்கம் செய்து கொடுக்கும் தன்னிகரற்ற பணியை இன்று தாய்ச்சபையின் நிர்வாகப் பெருமக்கள் செய்து வந்திருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய நடவடிக்கைகளை - அதுவும் இவைதான் செய்யப்பட வேண்டும் என்ற நிலையிலுள்ள நடவடிக்கைகளை, யாரும் செய்ய இயலாத அல்லது செய்யத் துணியாத நிலையிலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் எது குறித்தும் உடனுக்குடன் ஒருபோதும் மக்களிடத்தில் போய் விளம்பரப்படுத்தியது இல்லை. எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை.

பழுத்த அனுபவம் கொண்ட  தலைவர்கள்

அரசியல் என்று வந்துவிட்டால் பழுத்த அனுபவம் கொண்ட பண்பட்ட அரசியல் தலைவர் களின் வழிகாட்டுதல் நமக்கு இருந்து கொண்டிருக்கிறது. சமுதாயப் பணிகளில் மார்க்கம் என்று வந்துவிட்டால் கண்ணியத் திற்குரிய உலமா பெருமக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். அப்படிப்பட்ட மகத்துவமிக்க நமது தாய்ச்சபையில் இன்று கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்கள், ஐக்கிய ஜமாஅத்களின் நிர்வாகிகள் என பொதுமக்கள் முன்பை விட சாரிசாரியாக வந்து உறுப்பினர்களாக இணைந்து கொண்டிருக்கின்றனர். நமது அனைத்து பகுதிகளில் உள்ள நிர்வாகிகளும் முன்பை விட பெரும் ஊக்கமுடன் செயல்பட்டு, உறுப்பினர் சேர்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு அமானிதம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பது இன்று சமகாலத்தில் துவக்கப்பட்ட சமுதாய அமைப்புகளைப் போல இன்று நேற்று துவக்கப்பட்ட அமைப்பல்ல. மாறாக இந்திய விடுதலைப் போராட்ட துவக்க காலம் முதல், சுமார் நூறாண்டு கால வரலாற்றுக்குச் சொந்தமான கட்சி. இந்திய விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் கேட்பாரற்று அனாதையாக விடப்படும் சூழல் ஏற்பட்டபோது, தனிமனிதனாக நின்று, கடும் எதிர்ப்புகளையும் தாண்டி அகில இந்திய முஸ்லிம் லீக் என்று இருந்த இந்தக் கட்சியை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயரிட்டு மறுவடிவப்படுத்தி, தனது சீரிய தலைமையில் சமுதாயத்துக்கு வழிகாட்டி, இன்று நம்மிடத்தில் அமானிதமாக ஒப்படைத்துச் சென்றிருக் கிறார்கள் கண்ணியத்திற்குரிய பிதாமகன் காயிதே மில்லத் அவர்கள். ஆக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு எதுவோ அதுதான் இந்திய முஸ்லிம்களின் வரலாறு. இந்திய விடுதலைக்குப் பிறகு முஸ்லிம் சமுதாயம் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைத் தவிர்த்துவிட்டு ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது.
இத்தனை மகத்துவமிக்க கட்சியை நம்மிடத்தில் அமானிதமாக தலைவர்கள் தந்திருக்கிறார்கள்.

தலைமை பொறுப்பேற்க வாருங்கள்

நம்முடைய தேசிய தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் கூறுவது போல, """"இந்தக் கட்சி நேற்று இருந்தது... இன்று இருக்கிறது... இன்ஷா அல்லாஹ் நாளையும் இருக்கும்... இதன் தலைமை மாறலாம்; ஆனால் இதன் எண்ணமும், செயல்பாடும் ஒருபோதும் மாறாது! இந்தக் கட்சிக்குப் பணியாற்ற, கொடி பிடிக்க, கோஷம் போட வாருங்கள் என்று உங்களை நான் அழைக்கவில்லை... மாறாக உங்கள் தகுதிகளை நன்கு வளர்த்துக் கொண்டு, இந்தக் கட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்க வாருங்கள் என்றுதான் நான் அழைக்கிறேன்..."" என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்தக் கட்சிக்கும் கட்சியில் இருப்பவர்களுக்கும் என சமுதாயத்தில் தனியொரு கண்ணியம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இருக்கிறது. இந்தக் கட்சி சமுதாய நலனுக்கு எதிராக ஒருபோதும் மக்களைத் தூண்டி, முறையற்ற காரியங்களைச் செய்ததும் இல்லை; சமுதாயத்திற்கு தேவையான உரிமைகளைப் பெற வேண்டிய நேரத்தில் ஒருபோதும் வீரியமுடன் செயல்படாமல் இருந்ததும் இல்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

விரைவில் நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் நம் தாய்ச்சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதிக வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, தலைவர் - துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் நம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கும் சமுதாயத்தின் தேவைகளை மக்கள் மன்றங்களில் உடனுக்குடன் முன்வைத்து வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் வீரியமுடன் செயலாற்ற வேண்டும். அப்படியான செயல்பாடுகளில் உங்களுக்குத் துணையாக நாங்களும் இருப்போம் என்று உறுதி கூறிக் கொள்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது உறுப்பினர் சேர்க்கை என்பதை உணர்ந்தவர்களாக, இதுவரை இல்லாத அளவுக்கு பன்மடங்கு உறுப்பினர்களை இணைத்து, நம் தாய்ச்சபையை வலுப்படுத்துவோம்! சமுதாயத்துக்கு அதிகமதிகம் நற்பணிகளைச் செய்வோம்!! என்று கூறி, இந்த நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்த மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், இணைந்து பணியாற்றிய நம் தாய்ச்சபையின் அங்கங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.