Hot Posts

6/recent/ticker-posts

கல்வி தந்தை கே, நாவாஸ்கனி :


ஈவது இயல்பே என்பதற்கு சொந்தக்காரராக
திகழ்பவர் கே. நவாஸ் கனி எம்.பி.

  இராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘உயர்கல்வி உதவி’
வழங்கும் விழா சிறக்க பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து

இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி. அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் ஆவர்.

இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய ஆறு சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியது இராமநாதபுரம் பாராளு மன்றத் தொகுதி.

இந்த ஆறு தொகுதிகளில் உள்ள, ஏழை எளிய மாணவர்களுக்கு ‘உயர்கல்வி உதவி’ வழங்கும் சீர்மிகு விழா வரும் 04-12- 2021 சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள யாபா மஹாலில்  நடைபெறுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆன முதலாம் ஆண்டு 2019இல் இருநூறு மாணவ, மாணவியருக்கு இந்த உதவி அளிக்கப்பட்டது. இரண்டாம் வருடத்தில், 2020இல் எழுநூறு மாணவச் செல்வங்கள் இந்த உதவியைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

மூன்றாம் ஆண்டாகிய இவ்வாண்டு (2021) இல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நூறு  மாணவர் எனக் கணக்கெடுத்து, ஆறு தொகுதிகளிலிருந்து வரும் அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவத் தங்கங்களுக்கு நவாஸ்கனி ‘உயர்கல்வி உதவி’ வழங்குகிறார். இந்த சிறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இ.யூ. முஸ்லிம் லீகின் முன்னோடிகள் பல்வேறு நகர்மன்ற, ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசுத்துறை உயர்அதிகாரிகள் என்று எல்லாத் தரப்பினரும் பங்கேற்று தருபவரையும் பெறுபவரையும் வாழ்த்த உள்ளனர். நாமும் இவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

"ஈவது இயல்பே" என்பார்கள். அந்த இயல்புக்குச் சொந்தக்காரராக நவாஸ்கனி எம்.பி. இலக்கியம் படைத்து வருகிறார்.

"கொடுக்கக் கொடுக்கக் கூடும்" அள்ள அள்ளக் குறையாது "தர்மம் தலை காக்கும், தக்க தருணத்தில் உதவி செய்யும்" "இறைக்கிற கிணறுதான் ஊறும்" இவ்வாறான பழமொழிகள் நிரம்பவும் உள்ளன.

பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே கொடுப்பதில்தான் நிலைபெற்றிருக்கிறது. வானம் மழையைப் பொழிகிறது; காற்று வீசுகிறது, மரம் செடி கொடி யாவுமே எதையோ ஒன்றைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.

பசு, பாலமுது தருகிறது, பெற்ற தாய் தன் பிள்ளைக்கு பாலூட்டி வளர்க்கிறார். சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு வருடைய உழைப்பிலும், ஒவ்வொரு பொருள் தரும் நன்மையிலும், மானிட சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, கொடுப்பது, தனிப்பெருங் கொடைக்குணம் என்று கூறுவதை, அதுவே மானிடரின் இயல்புக் குணம் என்று திருத்திக் கூறுவதே சரியானதாகும்.

சகோதரர் நவாஸ்கனி, தனக்குரிய இயல்பான மானிட சேவையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப் போல், ஏதோ ஒருவகையில், இயங்க வேண்டிய பாடமும் இதில் அடங்கி இருக்கிறது.

2020 பிப்ரவரி 25இல் இந்திய நாடு கொரோனா தொற்றில் ஓராண்டு காலத்திற்குமேல் சிக்கித் தவித்தது. உள்நாட்டு மக்கள் பெரும் அவதிகளை அனுபவித்தனர். புலம் பெயர்ந்து வாழ்ந்தும், பிறர் வாழ்வதற்கு உழைத்தும் வந்த தமிழ்நாட்டினர், அயல் நாடுகளில் சிக்குண்டு, தாயகம் திரும்பிட வழிதெரியாமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களைத் தாயகம் திரும்புவதற்காக உதவி செய்தவருள் நவாஸ்கனி உலகம் தழுவிய நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார்.

லண்டன் மாநகரில் இயங்கி வரும் டபுல்யு.எச்.டி. World Humanitarian Drive என்ற சர்வதேச தொண்டு அமைப்பு, உலக அளவில் கோவிட்-19இல் போற்றத் தகுந்த சேவை செய்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உலகளாவிய மனித நேய விருதுகள்-கோவிட் விண்மீன்கள்-சிறந்த மானிடத் தூதர்கள் (Global Humanitarian Award - Stars of Covid - Best Public Ambassadors)  என்னும் விருதும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

34 நாடுகளைச் சேர்ந்த 1600 சேவையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உலக நாடுகளில் இந்தச் சேவையாளர் வரிசையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு பெற்றனர் காட்ஜி முராத் சர்ப்பக் (ரஷ்யா), டாக்டர் ஷேஹு பன்னா கமரா (கென்யா) லமின் ஜே. சன்னாஹ் (காம்பியா), கே. நவாஸ்கனி (இந்தியா)  இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சிறந்த மக்கள் தூதர்’ விருதாளர் நவாஸ்கனி மட்டுமே ஆவார்.

இந்த விருதை லண்டனில் 2020 ஜுன் 28ஆம் நாள் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள், கொசோவோ நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பத்மீர் சேஜ்டியூ, ஸ்பெயின் நாட்டு பாராளுமன்றத் தலைவர் பெட்ரோ ஐ அல்டமிரனோ ஆகிய சர்வதேசத் தலைவர்கள் அறிவித்தனர். இந்திய பாராளு மன்றத்திற்கு பெருமை சேர்ந்தது; தமிழகத்திற்குச் சிறப்புச் சேர்ந்தது; இ.யூ.முஸ்லிம் லீக்கின் தனித்தன்மை பளிச்சிட்டது. இந்திய முஸ்லிம் சமுதாயம் பெருமிதம் கொண்டுள்ளது.

தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் கூறுவார்: எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம் இல்லாத எளியோர்க்கு வழங்கி வாழ்வோம்! எல்லா மக்களுடனும் இணங்கி வாழ்வோம்! இந்தத் தாரக மந்திரம் நவாஸ்கனி அவர்களின் தொண்டில் ஒளிர்கிறது.

மாறாப் புகழுடைய சீறாவைப்பாடிய உமறு அப்பா கூறுகிறார்:

"தன்மமே பொருளெனத் தவத்தின் மேற்செலும் நன்மனத் தவர்க்குஒரு நாளும் தீங்கெனும் புன்மைவந் தமைந்திடாது என்னப் பூவினில் முன்மறை தேர்ந்தவர் மொழிந்த வாய்மையே" தன்னிடம் உள்ள பொருள், ஏழை எளியவர் இல்லாதவர் வறியவர் போன்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே தன்னிடம் தரப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து, அப்பொருளைத் தானம் செய்வதில் இன்பங் காணும் பெருமனங்கொண்ட வர்களுக்கு வாழ்க்கையில் ஒருபோதும் தீங்கு அணுகாது என்பதே எல்லா வேதங்களும் கற்றவர்கள் கூறும் பொன்மொழியாகும்.

இந்த நன்மொழிக்கும் பொன்மொழிக்கும் ஏற்ப, நடைபெறும் ‘உயர்கல்வி உதவி’ விழா சிறக்கவும், புதிய சாதனைகள் படைக்கவும் எல்லாம் வல்லவனிடம் வேண்டுவோம். தருகிற வருக்கும் பெறுகிறவருக்கும் பங்கேற்றுச் சிறப்பிப்போருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.