Hot Posts

6/recent/ticker-posts

லண்டனில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரின் உணருச்சிகரமான பதிவு:

அதிசயத்தும் நின்றேன்; அதிர்ந்தும் போனேன். இறைவன் வழங்கிய பெரும் பரிசு; அவனது பேரருள்.
இறைவா! உனக்குமட்டுமே புகழ் அனைத்தும்.

லண்டன் மாநகரில் இன்று 13/05/2022 வெள்ளிக்கிழமை பகல் 1 மணி .....

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் (London Kingston University) ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட மிகச் சிறந்த பல்கலைக்கழகம். உலகின்  பல நாடுகளிலிருந்தும் வந்து உயர்நிலைப்  பட்டப்படிப்பு முடித்துச் சென்ற மாணவ மாணவியர் பட்டங்கள் பெற அழைக்கப்பட்ட நாள். 

இப்பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம்பெறும் நாளை எதிர்நோக்கி இருந்தவர்களில் எனது மகன் சித்தீக் அஹ்மதும் ஒரு பட்டதாரி. நமது பிள்ளையின் பட்டமளிப்பு விழாவில் நாமும் கலந்துகொள்வோம் என்று நினைத்துதான் நானும் என் மனைவியும் லண்டன் வந்தோம். விழாவில் கலந்துகொண்டோம்.

அரங்கில் நுழைந்தபோது பட்டம்பெறும் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் நமது பிள்ளையும் ஒருவன் என்றுமட்டும்தான் நினைத்திருந்தேன். ஆனால் மேலதிக மதிப்பெண்கள் (Distinction) பெற்ற மாணவர்கள் மூன்று பேர்தான் என்றும், அந்த மூவரில் மகன் சித்தீக் அஹ்மதும் இடம் பெறுகிறார் என்றும் அறிந்தபோது அளவற்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது. படைத்த ரப்புக்கு, வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தி அரங்கில் அமர்ந்திருந்தேன். முன்வரிசையில் இருக்கைகள் தந்து அமரச் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மிகப் பெரிய பல்கலைக்கழகம் இது. இங்கு யாரையுமே நமக்குத் தெரியாது. என்ன நடக்கிறது இங்கே? ஒன்றுமே புரியவில்லை. எல்லோருக்கும் பட்டங்கள் வழங்கிய பிறகுதான் தெரிய வந்தது.  அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் சித்தீக் ஒருவரை மட்டுமே பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்து, விழாவின் நிறைவாக அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றியுரை ஆற்ற வைத்தது. அவ்வளவு பெரிய விழாவில் பெயர் சொல்லி அறிவிக்கப்பட்டபோது ஒருவித அதிர்வை உணர்ந்தேன். அதைவிட ஆங்கிலத்தில் சித்தீக்  உரையாற்றியபோதும், உரையினூடே கனியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் ' வரிகளைத் தமிழிலேயே சொல்லி மானுடத்தின் சிறப்பை, தமிழ் இலக்கியம் கற்றுத்தரும் நேர்த்தியைக் குறிப்பிட்டு மேற்கோள் காட்டியபோதும் மெய்சிலிர்த்துப் போனேன். அதிர்வலைகள் உடல் முழுவதும் பரவிவிட்ட நிலையில் முதன்முதலாக இக் காட்சியைக் கண்ட நான் உறைந்துபோனேன். இந்த விழாவில் நமது பிள்ளை நிறைவாக உரையாற்றப் போகிறான் என்றும் எனக்குத் தெரியாது. புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கு மட்டுமே. "இப்படி எழுதிக் காட்டுவது நம்முடைய பிள்ளையைப் பற்றியல்லவா!" என்று எண்ணுகிறபோது கொஞ்சம் கூச்சமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், என் அன்புள்ளங்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைத்தே இதைப் பதிவு செய்கிறேன். 

கடந்துவிட்ட எனது எத்தனையோ  நிகழ்வுகளைத் திரும்பிப் பார்த்தேன். அவைகள் எதுவுமே  என்னை எதுவும் செய்யவில்லை. மகிழ்ச்சி என்ற நிலையில் மட்டுமே கடந்துசென்றது.  

* எட்டாம் வகுப்பு மாணவப் பருவத்தில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் மாநிலத்தின் முதல் பரிசு பெற்றேன்.

* ஜமால் முகம்மது கல்லூரியில் "மிகச் சிறந்த மாணவன்" என்கிற பரிசை கல்லூரியின் வெள்ளிவிழா மேடையில் பெற்றேன்.

* துபாய் இஸ்லாமிய வங்கியில் துணைத் தலைவராக ஆனேன்.  சிறப்பு விருதுகளும் பெற்றேன்.

* மிகுந்த சவால்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் வென்றேன் எனும் செய்தியைப் பெற்றேன்.

* நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவிப் பிரமான உறுதி மொழி ஏற்றேன்.

* நாடாளுமன்ற உரைகளில் ஒன்றான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு விசாரனை மேற்கொண்ட லிபரான் கமிஷன் விவாதத்தில் கலந்து உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தேன்.

* மிகச்சிறந்த முதல் இருபது  நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறாவது என்ற தகவலை இந்தியா டுடே யிலிருந்து பெற்றேன்.

* நடப்பு ஆட்சி காலத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய த்தின் தலைவர் என அறிவிக்கப் பட்டேன். 
இவைகளில் எதிலும் பெற்றிடாத நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் இன்றைய லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் என் பிள்ளை மூலம் பெற்றதை பிரியமுள்ள பிறைநெஞ்சே! உன்னிடத்தில் உரிமையோடு பகிர்ந்துகொள்கிறேன். 
எல்லாவற்றிற்கும் பின்புலம் வல்ல இறைவன் ஒருவன் மட்டுமே. அவனின் பெருங்கருணை மட்டுமே. அடக்கத்தோடு நிறைவு செய்கிறேன். 

அன்புடன்
எம். அப்துல் ரஹ்மான்.